மாவட்ட செய்திகள்

தனிமை முகாம்களில் இருப்பவர்களின் கைகளில் ‘டேக்’ கட்ட முடிவு - வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தகவல் + "||" + Decision give tag in the hands of those in isolation camps - Revenue Minister R. Ashok Information

தனிமை முகாம்களில் இருப்பவர்களின் கைகளில் ‘டேக்’ கட்ட முடிவு - வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தகவல்

தனிமை முகாம்களில் இருப்பவர்களின் கைகளில் ‘டேக்’ கட்ட முடிவு - வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தகவல்
தனிமை முகாம்களில் இருப்பவர்களின் கைகளில் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘டேக்’ கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

வருவாய்த்துறை மந்திரியும், பெங்களூரு நகர கொரோனா நிர்வாக பொறுப்பு மந்திரியுமான ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் கொரோனா சமூக பரவல் கட்டத்தை அடைந்துவிட்டது என்பது எனக்கு தெரியாது. இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு 2, 3 நாட்களில் முதல்-மந்திரிக்கு அறிக்கை வழங்கும். நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் 596 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இதற்கான காரணம் இன்னும் 2 நாட்களில் தெரியவரும்.


இந்த விஷயத்தில் அரசு எதையும் மூடி மறைக்கவில்லை. கொரோனா பரவலை தடுக்க அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆயுர்வேத சிகிச்சை முறையை பயன்படுத்துவது குறித்து வாய்மொழியாக சில முடிவுகளை எடுத்துள்ளோம். கொரோனாவை தடுக்க முன்களத்தில் நின்று போராடும் போலீசார், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா பரிசோதனை முடிவு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் மற்றும் தனிமை முகாமில் இருப்பவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய கயிறை கையில் (டேக்) கட்ட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் அவர்கள் எங்கு நடமாடுகிறார்கள் என்பது தெரியவரும்.

அந்த கயிறை அறுக்க முயற்சி செய்தால், அது ஒலி எழுப்பும். இந்த முறை இன்னும் சில நாட்களில் அமலுக்கு வரும். விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வினியோகம் செய்யப்படுகிறது. சப்பாத்தி தயார் செய்ய ரூ.8 லட்சம் மதிப்புள்ள எந்திரத்தை வாங்கியுள்ளோம்.

நோயாளிகளுக்கு மூன்று வகையான உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. நீரிழிவு, சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு அதற்கு ஏற்ப உணவுகள் வழங்கப்படுகின்றன. சிலர் வீடுகளிலேயே விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக புகார்கள் வந்துள்ளன. அதனால் தான் இரவு 8 மணி முதலே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளுக்கு எண் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்பது குறித்து, கொரோனா போர் அலுவலகத்தில் விவரங்கள் கிடைக்கும். அதன் மூலம் கொரோனா பாதித்தோருக்கு விரைவாக படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தனிமை முகாம்களில் தங்குபவர்கள் வசதிக்காக சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு
தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்குபவர்களின் வசதிக்காக சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2. அந்தியூர் தனிமை முகாமில் கலெக்டர் ஆய்வு
அந்தியூர் தனிமை முகாமில் கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.