நெல்லை-அம்பையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா; 2 பெண் போலீசாருக்கும் தொற்று


நெல்லை-அம்பையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா; 2 பெண் போலீசாருக்கும் தொற்று
x
தினத்தந்தி 29 Jun 2020 5:18 AM IST (Updated: 29 Jun 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, அம்பையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பெண் போலீசாருக்கும் தொற்று உறுதியானது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருபவர்களால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் பரிசோதனை மையங்களிலும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த 16 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த 5 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அம்பையை சேர்ந்த 38 வயதுடைய டாக்டர், நெல்லை சந்திப்பு திலக் நகரை சேர்ந்த 45 வயதுடைய டாக்டர், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பிருந்தாவனம் தெருவை சேர்ந்த 44 வயதுடைய பெண் டாக்டர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர நெல்லை மாநகர பகுதியில் சேக் மதார் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கும், நெல்லை டவுன் அமீர்சாகிப் நகரை சேர்ந்த 50 வயது ஆணுக்கும், நெல்லை டவுன் மாதா தெருவை சேர்ந்த தம்பதியினருக்கும், அம்மன் சன்னதி தெருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த 2 பேருக்கும், சந்திப்பு பகுதியை சேர்ந்த 65 வயது ஆண், பாளையங்கோட்டை அருள் நகரை சேர்ந்த 54 வயது ஆண், கே.டி.சி.நகர் விரிவாக்கப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாளையங்கோட்டை மகராஜநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஒரு தொழில் அதிபர், 58 வயதான எல்.ஐ.சி. அதிகாரி, 2 பெண் போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது. சிலர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வசித்த பகுதி மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

களக்காடு சரோஜினிபுரத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் களக்காடு பழைய பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ளார். அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பது இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் ஒரு பெண்ணும், கீழப்பத்தையில் இளைஞர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story