கரூர் பகுதியில் 2 நாட்களாக மழை: வெங்கமேடு செல்லும் தற்காலிக சாலை அடைப்பு வாகன ஓட்டிகள் அவதி


கரூர் பகுதியில் 2 நாட்களாக மழை: வெங்கமேடு செல்லும் தற்காலிக சாலை அடைப்பு வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 29 Jun 2020 6:46 AM IST (Updated: 29 Jun 2020 6:46 AM IST)
t-max-icont-min-icon

கரூர் பகுதியில் 2 நாட்களாக மழை பெய்ததால் சேறும் சகதியுமாக மாறிய வெங்கமேடு செல்லும் தற்காலிக சாலை அடைக்கப்பட்டது.

கரூர்,

கரூர்-வெங்கமேடு இடையில் பள்ளபாளையம் ராஜவாய்க்காலின் மேல் புதிய பாலம் கட்டுமானப்பணி நடந்து வருவதால் வெங்கமேட்டிலிருந்து கரூருக்கும், பிற பகுதிகளுக்கும் செல்பவர்கள் வாங்கப்பாளையம் - அரசு காலனி வழியாகவும், பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதை வழியாகவும், பைபாஸ் சாலை வழியாகவும் கரூர் நகருக்கு வந்து சென்றனர்.

இந்நிலையில் வாய்க்கால் பணி நடக்கும் பகுதிக்கு அருகிலேயே வாகனங்கள், நடந்து செல்பவர்கள் வசதிக்காக ஒரு மாற்று பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அடிக்கடி மழை பெய்ததால் அந்த சாலை சேறும் சகதியுமாக மாறியதை அடுத்து மண் கொண்டு வந்து கொட்டப்பட்டு பாதை சரிசெய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.

போக்குவரத்திற்கு தடை

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கரூர் நகரில் பலத்த மழை பெய்ததால் தற்காலிக மண் சாலையின் பிறபகுதிகளில் அதிகஅளவில் மழைநீர் தேங்கியது.

மேலும் அந்த பகுதி முழுவதும் தாழ்வான, விவசாய நிலப்பகுதியாக இருப்பதாலும், அருகில் உள்ள ரெயில்பாதை பகுதியில் இருந்து மழைநீர் அந்த பகுதிக்கு வருவதால் மழைநீர் அந்த பகுதியில் தேங்கியது. மேலும் அந்த சாலை பகுதியில் உள்ள வாய்க்கால்களும் நீர் நிரம்பி ஓடியதால் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கியது. இதனால் மண் சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதை தவிர்க்கும் பொருட்டு, அப்பகுதியின் நுழைவு வாயில் பகுதியில் முள் வேலி மற்றும் இரும்பு கம்பியால் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

கரூரில் இருந்து வெங்கமேடு செல்பவர்கள் ஐந்துரோடு, அரசுகாலனி அல்லது பைபாஸ் சாலை வழியாக 5 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு வாகன ஓட்டிகள் செல்வதால் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story