கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக மாறும் பீளமேடு கோவையில் பரிசோதனைகளை அதிகரிப்பதால் தொற்று எண்ணிக்கை உயருகிறது


கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக மாறும் பீளமேடு கோவையில் பரிசோதனைகளை அதிகரிப்பதால் தொற்று எண்ணிக்கை உயருகிறது
x
தினத்தந்தி 29 Jun 2020 3:50 AM GMT (Updated: 29 Jun 2020 3:50 AM GMT)

கோவையில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால் கொரோனா தொற்று எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக பீளமேடு மாறி உள்ளது.

கோவை,

கோவையில் கடந்த மாதம் இறுதி வரை புதிதாக ஒரு தொற்று கூட இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சென்னையில் இருந்து ரெயில், கார் மற்றும் விமானங்கள் மூலம் வந்தவர்களால் தொற்று அதிகரித்தது. இதனால் நேற்று வரை 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக தினமும் 30 முதல் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதின் மூலம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான பயணிகள்

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நேற்று 2 ஆயிரத்து 300 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதற்கு முன்பு இந்த அளவுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது இல்லை. முன்பு விமானநிலையம், ரெயில் நிலையம், சோதனைச்சாவடிகளில் தினமும் ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

ஆனால் தற்போது அவற்றின் வழியாக கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து 200 பேருக்குத்தான் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் விமானம், ரெயில், சாலை மார்க்கமாக வருபவர்களால் தொற்று பரவுவது குறைந்துள்ளது.

கோவையில் வேகமாக பரவுகிறது

ஆனால் கோவை மாநகருக்குள் தற்போது தொற்று வேகமாக பரவுகிறது. இதற்கு காரணம் பரிசோதனைகள் அதிகப்படுத்துவதின் மூலம் தொற்றும் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே வருவதால் தான் தொற்று வேகமாக பரவுகிறது.

எனவே அவசியமில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவது கடினம். அப்படியே வெளியே வந்தாலும் தனி நபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றினால் தொற்றிலிருந்து தப்பிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பீளமேட்டில் அதிகம் பாதிப்பு

கோவை பீளமேட்டில் உள்ள ஒரு பட்டு விற்பனை நிலையத்தில் வேலை செய்த ஒருவர் மூலம் 19 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இதனால் அந்த பகுதி தொற்று அதிகம் பாதித்த பகுதியாக (கிளஸ்டர்) அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவையில் இதற்கு முன்பு ஒரே இடத்தில் அதிகம் பேருக்கு தொற்று உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story