தனியார் ஊசி தொழிற்சாலையில் பணிபுரிந்த 210 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு


தனியார் ஊசி தொழிற்சாலையில் பணிபுரிந்த 210 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 3:56 AM GMT (Updated: 29 Jun 2020 3:56 AM GMT)

தனியார் ஊசி தொழிற்சாலையில் பணிபுரிந்த 210 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் தனியார் ஊசி தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அங்கு மக்கள் தொடர்பு அலுவலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலை மூடப்பட்டது. அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் என 755 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளான கேத்தி, பிரகாசபுரம், எல்லநள்ளி, உல்லாடா, அச்சனக்கல், மந்தாடா ஆகிய கிராமங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று யாருக்கேனும் காய்ச்சல், இருமல், சளி உள்ளதா? என்று ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் யாருக்கேனும் கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சளி மாதிரி

இதற்கிடையில் அங்கு 25-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக எல்லநள்ளியானது தொற்று பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு, கிளஸ்டராக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 755 பேரில், 210 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. ஏற்கனவே ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட குளிச்சோலை கிளஸ்டராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story