டாஸ்மாக்கடை திறக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை


டாஸ்மாக்கடை திறக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 29 Jun 2020 10:19 AM IST (Updated: 29 Jun 2020 10:19 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக்கடை திறக்க எதிர்ப்பு; கிராம மக்கள் முற்றுகை.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் உமையாள்புரம் பகுதியில் புதிய மதுபானக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இப்பகுதியில் மதுக்கடை திறந்தால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்பட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைவதை தடுத்து நிறுத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கிராம மக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் மாற்று இடத்தில் மதுக்கடையை கொண்டு செல்ல டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளதாக போலீஸ் துணை சூப்பிரண்டு கூறியதையடுத்து பொதுமக்கள்அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குடும்பத்தலைவி உமா கூறியதாவது:- உமையாள்புரம் பகுதியில் டாஸ்மாக் நிர்வாகம் புதிதாக மதுக்கடை திறக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க முயன்றனர். அப்போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதனை தொடர்ந்து கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.எனவே உடனடியாக மதுக்கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். எங்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்க முயன்றால் அதனை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story