மாவட்ட செய்திகள்

தற்காலிக பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா: நாமக்கல் நகராட்சி அலுவலகம் மூடல் + "||" + Corona for 3 temporary employees Closure of Namakkal Municipal Office

தற்காலிக பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா: நாமக்கல் நகராட்சி அலுவலகம் மூடல்

தற்காலிக பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா: நாமக்கல் நகராட்சி அலுவலகம் மூடல்
நாமக்கல் நகராட்சியில் தற்காலிக பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
நாமக்கல்,

நாமக்கல் நகராட்சியில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வரும் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதேபோல் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பழுதுபார்க்க வந்த நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் நகராட்சி அருகே உள்ள தினசரி சந்தையில் 2 வியாபாரிகளுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இவர்கள் 6 பேருக்கும் இன்னும் கொரோனா இருப்பதை மாநில சுகாதாரத்துறை உறுதி செய்யவில்லை.


இருப்பினும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவே நாமக்கல் தினசரி சந்தை மூடப்பட்டது. இதனால் நேற்று காலையில் தினசரி சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதற்கிடையே நேற்று காலையில் நகராட்சி அலுவலகத்திலும் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது. அதன் வாயிற் கதவில் நோய் கட்டுப்பாட்டு மண்டலம் என அறிவிப்பு ஒட்டப்பட்டது.

இதற்கிடையே நகராட்சியில் பணியாற்றி வரும் சுமார் 120 பணியாளர்கள், காய்கறி சந்தையில் உள்ள 40 வியாபாரிகளுக்கு நேற்று நாமக்கல் தாய்-சேய் நல விடுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (புதன்கிழமை) முதல் நகராட்சி அலுவலகம் வழக்கம்போல் செயல்படும் என கூறிய ஆணையாளர் ஜஹாங்கீர்பாஷா, தினசரி 4 முறை நகராட்சி அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.