வண்டலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை பணியிட மாறுதல் காரணமா?


வண்டலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை பணியிட மாறுதல் காரணமா?
x
தினத்தந்தி 29 Jun 2020 11:08 PM GMT (Updated: 29 Jun 2020 11:08 PM GMT)

வண்டலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் பணி இட மாறுதல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே வண்டலூர் கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஊனமாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கிஷோர் (வயது 51). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 8-ந்தேதி முதல் ஆவடியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி இடமாறுதல் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மதியம் குடும்ப பிரச்சினை காரணமாக அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர், ஆத்திரத்துடன் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

அதன்பிறகு நீண்டநேரமாகியும் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கிஷோர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஓட்டேரி போலீசார் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர், குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணி இடமாறுதல் காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story