கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதில்


கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதில்
x
தினத்தந்தி 30 Jun 2020 11:00 PM GMT (Updated: 30 Jun 2020 8:02 PM GMT)

கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பதற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதில் அளித்து உள்ளார்.

ஹாசன்,

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் கர்நாடக அரசும், சுகாதாரத்துறையினரும் விழிபிதுங்கி நிற்கின்றனர். கடந்த சில தினங்களாக மாநில தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 5-ந் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார்.

இதற்கிடையே வருகிற 7-ந் தேதிக்கு பிறகு கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் அறிவித்தார். இதனால் கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மந்திரி ஆர்.அசோக் நேற்று ஹாசன் கலெக்டர் அலுவலகம் அருகே புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று மந்திரி ஆர்.அசோக்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை. இதுதொடர்பாக வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தேவைப்பட்டால் கலெக்டர்கள் சீல் வைத்து கொள்ளலாம். அதற்கு கலெக்டர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கி உள்ளோம். 80 சதவீத மக்கள் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதை விரும்பவில்லை. ஊரடங்கை அமல்படுத்தினால் பொருளாதார பிரச்சினையும் அதிகம் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story