நெல்லையில் காய்கறி, மளிகை கடைகள் அடைப்பு


நெல்லையில் காய்கறி, மளிகை கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 30 Jun 2020 11:48 PM GMT (Updated: 2020-07-01T05:18:44+05:30)

நெல்லையில் நேற்று காய்கறி, மளிகை கடைகள் அடைக்கப்பட்டன.

நெல்லை,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் வியாபார நிறுவனங்கள் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். அன்றைய தினம் கடை மற்றும் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து, முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் இரும்பு, சிமெண்டு, ஹார்டுவேர்ஸ், பர்னிச்சர், செல்போன், எலக்ட்ரிக்கல் கடைகள் மூடப்பட்டிருந்தன.

நேற்று செவ்வாய்க்கிழமை காய்கறி கடைகள், மளிகை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நெல்லை மாநகரில் டவுன் கடை வீதிகள், சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும் ஜவுளி, நகை, கவரிங், பெரிய மால்கள், டி.வி. ஷோரூம், எண்ணெய், பழக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பாளையங்கோட்டை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு ஒரு சில வியாபாரிகள் மட்டும் காய்கறிகளை விற்பனை செய்தனர். இதைக்கண்ட மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்ததோடு, கடைகளை அகற்றவும் உத்தரவிட்டனர்.

நெல்லை புதிய பஸ்நிலைய வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. இதனால் பஸ் நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

டெல்லி நிஜாமுதீனில் இருந்து கொண்டு வரப்பட்ட உருளைக்கிழங்கு, மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்லாரி மூடைகள் மட்டும் லாரிகளில் இருந்து இறக்கப்பட்டன.

இன்று (புதன்கிழமை) பேக்கரி, மிட்டாய் கடைகள், ஆப்டிக்கல்ஸ் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பாத்திரம், லெதர், பேக், பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள் நாளையும் (வியாழக்கிழமை), சலூன், அழகு நிலையங்கள், தையல் கடைகள் வெள்ளிக்கிழமையும், அனைத்து திருமண மண்டபங்கள், மினி ஹால்கள் சனிக்கிழமையும், லாரி புக்கிங், கூரியர், தனியார் பார்சல் சர்வீஸ், ஓட்டல்கள் மற்றும் மோட்டார் வாகன விற்பனை ஷோரூம்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story