சாமல்பட்டி ரெயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரில் வாகனத்தில் சிக்கி தவித்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள்


சாமல்பட்டி ரெயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரில் வாகனத்தில் சிக்கி தவித்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
x
தினத்தந்தி 1 July 2020 1:25 AM GMT (Updated: 1 July 2020 1:25 AM GMT)

சாமல்பட்டி ரெயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரில் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாகனத்தில் சிக்கி தவித்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு அவர்கள் மீட்கப்பட்டனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில் ரெயில்வே தரைப்பாலம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த பகுதியில் பெய்த கனமழையால் தரைப்பாலத்தில் சுமார் 6 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் ஊத்தங்கரை நோக்கி அரசு வாகனத்தில் வந்த மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைராஜ், வெங்கட்ராம கணேஷ் உள்பட 4 பேர் தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரில் சிக்கிக்கொண்டனர்.

இடுப்பளவு மழைநீரில் சிக்கிக்கொண்டதால் அருகில் யாரும் செல்லாமல் 2 மணி நேரம் வாகனத்திற்குள்ளேயே தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து டிராக்டரில் கயிறு கட்டி ஒரு மணி நேரம் போராடி அலுவலர்கள் மற்றும் வாகனத்தை மீட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்று வட்டார சாமல்பட்டி, காரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கனமழை பெய்தது. பெய்த கனமழையினால் சாமல்பட்டி தரை பாலத்தில் இரவு 3 மணி முதலே மழைநீர் அதிக அளவு தேங்கி நின்றது. தினமும் பெங்களூரு, புதுச்சேரி வரை பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக தான் செல்கின்றது.

இதனால் ஊத்தங்கரை வழியாக சாமல்பட்டியை கடந்து பெங்களூரு செல்லும் வாகனங்களும், புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்களும் இந்த தரைப்பாலம் வழியாக செல்ல முடியாமல் தண்ணீரில் ஊர்ந்து சென்றது. மேலும் இரவு நேரத்தில் கனரக வாகனங்கள் செல்லாமல் காத்து கிடக்கின்றது. மழைநீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்ட பிறகு தான் வாகனங்கள் செல்ல முடியும். மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் இதுபோல் தண்ணீர் தேங்குவதை கட்டுப்படுத்தவும், தண்ணீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story