வேலூர் துணிக்கடை உரிமையாளர் மகன் கொரோனாவுக்கு பலி திருவண்ணாமலையில் முதியவர் சாவு


வேலூர் துணிக்கடை உரிமையாளர் மகன் கொரோனாவுக்கு பலி திருவண்ணாமலையில் முதியவர் சாவு
x
தினத்தந்தி 1 July 2020 7:42 AM IST (Updated: 1 July 2020 7:42 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற துணிக்கடை உரிமையாளரின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் முதியவர் கொரோனாவுக்கு இறந்தார்.

வேலூர்,

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரசா 2-வது தெருவை சேர்ந்த 27 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர் லாங்கு பஜாரில் உள்ள துணிக்கடை உரிமையாளரின் மகன் ஆவார். அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிகிச்சைக்காக சி.எம்.சி. கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு வாலிபரின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த வாலிபரின் பெற்றோர், வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொரோனாவினால் பலியான வாலிபரின் உடல் அரசு விதிமுறைகளின் படி அடக்கம் செய்யப்பட்டது. இதில், அவருடைய குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர்.

இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அரசு விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,824 ஆக உயர்ந்துள்ளது.

Next Story