தேசூர் பகுதியில் வங்கி மேலாளர், காசாளர் உள்பட 10 பேருக்கு கொரோனா ஒரு வாரம் கடைகளை மூட வியாபாரிகள் முடிவு


தேசூர் பகுதியில் வங்கி மேலாளர், காசாளர் உள்பட 10 பேருக்கு கொரோனா ஒரு வாரம் கடைகளை மூட வியாபாரிகள் முடிவு
x
தினத்தந்தி 1 July 2020 7:48 AM IST (Updated: 1 July 2020 7:48 AM IST)
t-max-icont-min-icon

தேசூர் பகுதியில் வங்கி மேலாளர், காசாளர் உபட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த பகுதியில் ஒரு வாரம் கடைகளை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சேத்துப்பட்டு,

தேசூர் பேரூராட்சியில் ஸ்டேட் வங்கி உள்ளது. இதன் மேலாளராக பணிபுரிந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசூர் அருகே உள்ள பொன்னூர் வங்கி கிளைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 27-ந்தேதி சொந்த ஊரான கடலூருக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து தேசூர் வங்கியில் வேலை செய்தவர்களுக்கு தெள்ளார் வட்டார மருத்துவர் செல்வமுத்து குமாரசாமி தலைமையில், மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் வங்கி காசாளர், 2 ஊழியர்கள் மற்றும் காவலாளிக்கு தொற்று பரவியது தெரியவந்தது. இதனிடையே காவலாளியின் மனைவி, மகன் ஆகியோருக்கும் தொற்று இருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ளவர்கள், வங்கிக்கு வந்து சென்றவர்கள் என 32 பேரை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் 3 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இவர்களில் மேலாளர் மற்றும் காசாளர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 7 பேர் வெண்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும், வந்தவாசி மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து தேசூர் பெரியகடை வீதி, சின்ன கடைவீதி பகுதியில் வியாபாரிகள் தங்கள் கடையை ஒரு வாரத்திற்கு மூடி வைக்க முடிவு செய்துள்ளனர்.

மேற்கண்ட 10 பேர் உள்பட தேசூர் பகுதியில் கொரோனா பரவிய 12 இடங்களில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அப்பகுதிகளில் தேசூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா மற்றும் தூய்மை பணியாளர்கள் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

Next Story