கோவில்பட்டியில், முகக்கவசம் அணியாத ஊழியர்கள்: கடை உரிமையாளர்களுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை
முகக் கவசம் அணியாமல் இருந்ததால், கடை உரிமையாளர்களுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் உள்ள கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியாமல் இருந்ததால், கடை உரிமையாளர்களுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் ராஜாராம், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நகரசபை சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சுரேஷ் உள்ளிட்ட குழுவினர் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம், கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பஜார் மார்க்கெட் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அபராதம் வசூல்
அப்போது கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களில் பலர் முகக் கவசம் அணியாமல் இருந்தனர். மொத்தம் 80 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில் முகக் கவசம் அணியாமல் கடையில் பணியாற்றிய 90 ஊழியர்கள் மற்றும் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் 20 பேர் என மொத்தம் 110 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு கடை உரிமையாளர்களிடம் மொத்தம் ரூ.11 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
எச்சரிக்கை
இதுகுறித்து நகரசபை ஆணையாளர், தாசில்தார் ஆகியோர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் தடுக்கும் பொருட்டு அனைத்து கடைகளிலும் பணியில் இருக்கும் ஊழியர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்கவேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் முகக் கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். கடையில் முகக் கவசம் அணியாமல் யாரேனும் கண்டறியப்பட்டால் கடை உரிமையாளரே அதற்கான அபராதத்தை செலுத்த நேரிடும், என எச்சரித்தனர்.
Related Tags :
Next Story