புதுச்சேரியில் நூதனம் பாதி தார் சாலை, மீதி சிமெண்டு சாலை
புதுவை ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே நூதன முறையில் பாதி தார் சாலை, மீதி சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே நூதன முறையில் பாதி தார் சாலை, மீதி சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
செயிண்ட் வீதி
புதுச்சேரி என்றாலே வீதி அழகு என்பார்கள். அந்த அளவுக்கு இங்கு உள்ள வீதிகள் நேராகவும், சுத்தமாகவும் இருக்கும். நகர் புறத்தைப் பொறுத்தவரை இங்குள்ள சாலைகள் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறையால் (நகராட்சி) பராமரிக்கப்படுகின்றன. உள்ளாட்சித்துறை பராமரித்து வரும் சாலைகளை செப்பனிட போதிய நிதி இல்லாவிட்டால் அந்த துறையில் தடையில்லா சான்றிதழ் பெற்று பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் அமைக்கப்படும்.
நகராட்சிக்குட்பட்ட சாலைகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மிஷின் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே உள்ள செயிண்ட் வீதி கடந்த ஆண்டு பெய்த மழையால் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து அந்த வீதி சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. அதாவது சுமார் நூறு மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அகற்றப்பட்டு சிமெண்டு சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கு இணையான மற்றொரு பகுதி முன்பு போலவே தார் சாலையாக உள்ளது.
அனுமதி பெறவில்லை
நூதனமான முறையில் போடப்பட்டுள்ள இந்த சாலையை அந்த வழியாக செல்பவர்கள் வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர். இது தொடர்பாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. அரசு நிதியை முறையாக செலவிடாமல் ஏதோ செலவிட வேண்டும் என்ற நோக்கத்துக்காக இவ்வாறு சாலை போடப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கான முறையான டெண்டரும் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. உள்ளாட்சித்துறைக்கு சொந்தமான இந்த சாலை துறையின் அனுமதி இல்லாமலே ரூ.3 லட்சம் செலவில் போடப்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் மழுப்பலாக பதில் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story