வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி: டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு ஜெயில்
பணமோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நாகர்கோவில்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணமோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
டிராவல்ஸ் உரிமையாளர்கள்
குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் பெனிடிக் மார்ட்டின் (வயது 52). இவர் தனது நண்பரான கருங்கல் வழுதலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (71) என்பவருடன் சேர்ந்து கடந்த 2000-ம் ஆண்டு தக்கலை பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். தக்கலை பகுதியை சேர்ந்த நிஷா என்பவர் இங்கு ஊழியராக வேலை பார்த்தார்.இந்த நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு குமரி மாவட்டத்தை சேர்ந்த அணில்குமார், அமிர்தாஸ், தேவராஜ் உள்பட 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி டிராவல்ஸ் உரிமையாளர்கள் ரூ.4 லட்சத்து 58 ஆயிரம் மோசடி செய்தனர். இதுதொடர்பாக 7 பேரும் தனித்தனியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
மோசடி வழக்கு
இதையடுத்து டிராவல் ஏஜென்சி உரிமையாளர்களான பெனிடிக் மார்ட்டின், ராஜேந்திரன் மற்றும் அங்கு பணியாற்றிய நிஷா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி வழக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் நாகர்கோவில் 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஆரம்ப கட்டத்தில் இருந்து பெனிடிக் மார்ட்டின் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. பின்னர் இவரது வழக்கை தனியாக கோர்ட்டு நடத்தி வருகிறது. இதற்கிடையே நிஷா என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நிஷா இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
3 ஆண்டு ஜெயில்
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், ராஜேந்திரன் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து, அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்தை கொடுத்து அதற்கான 9 சதவீத வட்டியும் 2 மாத காலத்துக்குள் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story