சேலம் மாவட்டத்தில் புதிய உச்சத்தை தொட்டது: ஒரேநாளில் 178 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 178 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 178 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக பரவுகிறது
தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாடு, மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களுக்கு மாவட்ட எல்லையிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
178 பேர் பாதிப்பு
இதில் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 25 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 178 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 42 பேர், மேட்டூர் 66 பேர், ஓமலூர் 12 பேர், ஆத்தூர் 10 பேர், தாரமங்கலம் 5 பேர், நங்கவள்ளி, ஏற்காடு, எடப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், தலைவாசல் 2 பேர், தம்மம்பட்டி, ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், கன்னங்குறிச்சி, சன்னியாசிகுண்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 பேர் என 162 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பீகாரில் இருந்து சேலம் வந்த 4 பேர், ராஜஸ்தானில் இருந்து வந்த 4 பேர், உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த 3 பேர், மராட்டியம், கர்நாடகம், ஜார்கண்ட், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் மற்றும் கென்யாவில் இருந்து வந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
பரிசோதனை அதிகரிப்பு
இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் துக்க நிகழ்ச்சி வீடுகளுக்கு சென்றவர்கள், பொது இடங்களில் கூட்டமாக நின்றவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற மையங்கள், சுங்கச்சாவடி இடங்கள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக 1,600 பேர் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த அதிகரிப்பால் பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம்முடைய பகுதியில் வசிப்பவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனை செய்ய யாரும் தயங்க கூடாது. தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால் கண்டிப்பாக முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story