தஞ்சை மாவட்டத்தில் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கலெக்டர் கோவிந்தராவ் தகவல்


தஞ்சை மாவட்டத்தில் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கலெக்டர் கோவிந்தராவ் தகவல்
x
தினத்தந்தி 2 July 2020 5:00 AM IST (Updated: 2 July 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.

ஆலோசனைக்கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் போன்ற வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வழிபாட்டு தலங்களை அரசு வழிகாட்டுதல்களுடன் திறப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற மாவட்ட அளவிலான 3 சமுதாய தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினர்.

குழுக்கள் அமைப்பு

மேலும் கோட்ட அளவில் கோட்டாட்சியர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரும், வட்ட அளவில் தாசில்தார் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரும் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்குழுவினர் மூன்று மதங்களை சார்ந்த தலைவர்களுடன் கூட்டம் நடத்துவர்.

இதில், ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள எந்தெந்த வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என வட்ட அளவிலான குழுக்களின் பரிந்துரையை கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் பரிசீலித்து முடிவு செய்வர். இதன்படி கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள் திறக்கப்படும்.

முழு ஊரடங்கு

தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி, 22 பேரூராட்சிகளின் எல்லைகளில் உள்ள கோவில்களை திறக்க அனுமதியில்லை. தஞ்சை மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மாவட்டத்தில் இதுவரை 44,754 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா பரிசோதனை வசதி மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றுக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இருந்தால் அப்பகுதியை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் 22 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.

சென்னை மற்றும் இதர பகுதிகளிலிருந்து வந்த 9,289 பேரில் 345 பேர் தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்திலும், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 241 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வல்லம் கொரோனா சிகிச்சை மையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, 8,673 பேர் அவரவர் வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

240 பேர் குணமடைந்தனர்

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொறுப்பு) டாக்டர் மருதுதுரை கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 448 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 240 பேர் குணமடைந்தனர். மாவட்டத்தில் குணமடைவோர் விகிதம் 60 சதவீதமாக உள்ளது. இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரம் ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே 2,600 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதேபோல தீவிர சிகிச்சை பிரிவில் 115 படுக்கைகள் இருக்கின்றன. மேலும், கொரோனா பரிசோதிப்பதற்கான சுமார் 16,000 பிபிஇ சாதனங்களும், 1.37 லட்சம் முகக்கவசங்களும் கையிருப்பில் உள்ளன” என்றார்.

Next Story