விவசாய நில சீர்திருத்த சட்ட திருத்தத்தை கைவிடக் கோரி மந்திரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
விவசாய நில சீர்திருத்த சட்ட திருத்தத்தை கைவிடக் கோரி மந்திரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மைசூரு,
விவசாய நில சீர்திருத்த சட்ட திருத்தத்தை கைவிடக் கோரி மந்திரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம்
கர்நாடகத்தில் விவசாய நில சீர்த்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் எதிர்ப்பை மீறி இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மாநில கூட்டுறவுத் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான எஸ்.டி.சோமசேகர் நேற்று மைசூரு மண்டல கமிஷனர் அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த அலுவலகத்தை மைசூரு மாவட்ட விவசாயிகள் திடீரென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மந்திரியை முற்றுகையிட்டனர்
அப்போது அவர்கள் கர்நாடக அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கைவிடக் கோரி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினார்கள். இதைதொடர்ந்து மந்திரி எஸ்.டி.சோமசேகர் மண்டல கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும் அவரிடம் விவசாயிகள், கர்நாடகத்தில் விவசாய நில சீர்த்திருத்த சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும், விவசாய விரோத போக்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக கோரிக்கை மனுவை விவசாயிகள், மந்திரி எஸ்.டி.சோமசேகரிடம் வழங்கினர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பரபரப்பு
அதைதொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story