நாக்பூர் மாநகராட்சி கமிஷனர் துக்காராம் முண்டேக்கு எதிராக மத்திய மந்திரி நிதின்கட்காரி போர்க்கொடி
நாக்பூர் மாநகராட்சி கமிஷனர் துக்காராம் முண்டேவுக்கு எதிராக மத்திய மந்திரி நிதின்கட்காரி போர்க்கொடி தூக்கி உளளார்.
மும்பை,
நாக்பூர் மாநகராட்சி கமிஷனர் துக்காராம் முண்டேவுக்கு எதிராக மத்திய மந்திரி நிதின்கட்காரி போர்க்கொடி தூக்கி உளளார்.
துக்காராம் முண்டே
மராட்டியத்தில் மக்களின் நன்மதிப்பெற்ற பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான துக்காராம் முண்டே தற்போது, பாரதீய ஜனதா அதிகாரத்தில் இருக்கும் நாக்பூர் மாநகராட்சி கமிஷனராக இருக்கிறார். வழக்கம் போல் அங்கும் அவர் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ளார். நாக்பூரில் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கியதில் தனது பதவியை பயன்படுத்தி துக்காராம் முண்டே ரூ.18 கோடி அளவுக்கு பணமோசடியில் ஈடுபட்டு உள்ளதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், துக்காராம் முண்டே மீது நடவடிக்கை எடுக்கும்படி பாரதீய ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி நிதின் கட்காரி மத்திய டி.ஓ.பி.டி. துறை மந்திரி ஜிதேந்திர சிங் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப் புரி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பதவியை கைப்பற்றினார்
நாக்பூர் மாநகராட்சி கமிஷனராக கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி பொறுப்பேற்ற துக்காராம் முண்டே சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் நாக்பூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் நகர மேம்பாட்டு கழக (என்.எஸ்.எஸ்.டி.சி.எல்.) தலைமை நிர்வாக அதிகாரி பதவியை கைப்பற்றியுள்ளார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ராம்நாத் சோனவனே பிப்ரவரி 11-ந் தேதி ராஜினாமா செய்த பிறகு, என்.எஸ்.எஸ்.டி.சி.எல். தலைவர் பிரவின்சிங் பர்தேஷி தன்னை அந்த பதவியில் நியமித்ததாக கூறி வருகிறார்.
என்.எஸ்.எஸ்.டி.சி.எல். தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் அதன் இயக்குனர்கள் குழுவுக்கு தான் உள்ளது. அதன் தலைவரிடம் இல்லை. துக்காராம் முண்டே அந்த பதவிக்கு வந்த பின்னர் ஒப்பந்த பணியாளர்களை நீக்கியது, நிதி முறைகேடு செய்தது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். நிதி மோசடி செய்தது தொடர்பாக துக்காராம் முண்டே மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் நாக்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பாதுகாக்க துக்காராம் முண்டே மீது கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
மராட்டியத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு எதிராக மத்திய மந்திரி நிதின் கட்காரி போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story