புதிதாக 28 போலீசாருக்கு தொற்று; சென்னையில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி


புதிதாக 28 போலீசாருக்கு தொற்று; சென்னையில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 1 July 2020 11:45 PM GMT (Updated: 2020-07-02T04:52:04+05:30)

சென்னையில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். புதிதாக 28 போலீசாரை நேற்று கொரோனா தாக்கியது.

சென்னை,

சென்னை போலீஸ்துறையில் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனாவுக்கு முதல் பலி ஆனார். இந்தநிலையில் சென்னையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் (வயது 57) பலியாகி உள்ளார். இவர் சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். ஓய்வு பெற்ற ஐ.ஜி. ஒருவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

இவர் கடந்த மாதம் 11-ந்தேதி அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னை சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்தார். மனைவி பெயர் நிர்மலா. ராஜேஷ் என்ற மகன் உள்ளார்.

கொரோனாவுக்கு பலியான மணிமாறன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று பட்டினப்பாக்கம் போலீஸ்நிலையத்தில் நேற்று மாலை நடந்தது. போலீஸ் டி.ஜி.பி. ஜெ.கே.திரிபாதி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் மணிமாறன் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை போலீசில் ஏற்கனவே 1,155 போலீசார் கொரோனா பிடியில் சிக்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று 28 பேரை நேற்று கொரோனா தாக்கியது. இதையடுத்து சென்னை போலீசில் கொரோனா தொற்று பாதிப்பு 1,183 ஆக உயர்ந்தது.

ஒருபுறம் தொற்று பரவினாலும், மறுபுறம் போலீசார் குணம் அடைந்து பணிக்கு திரும்பி வருகிறார்கள். அதன்படி 31 போலீசார் பூரண குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பினார்கள். இதையடுத்து சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து பணிக்கு திரும்பிய போலீசாரின் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்தது.

Next Story