கொரோனா பரவல் காரணமாக லால்பாக் ராஜா மண்டலில் விநாயகர் சதுர்த்தி விழா ரத்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக லால்பாக்ராஜா விநாயகர் மண்டல் அறிவித்துள்ளது.
மும்பை,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக லால்பாக்ராஜா விநாயகர் மண்டல் அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி
உலக நாடுகளை புரட்டி எடுத்து வரும் கொரோனா மக்களின் கலாசாரம், பண்பாட்டை வெளிப்படுத்தும் பண்டிகைகளையும் முடக்கி வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த பண்டிகை நாட்டின் மற்ற பகுதிகளை விட மராட்டியத்தில் தான் 11 நாட்கள் வரை மிகவும் ஆடம்பரமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை எளிமையாக கொண்டாட வேண்டும் எனவும், 4 அடிக்கும் மேல் உயரமான சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது என்றும் மண்டல்களை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார்.
லால்பாக் ராஜா
மும்பையில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளில் முதன்மையானது மத்திய மும்பையின் லால்பாக் விநாயகர் சிலை. இந்த விநாயகர் சிலையை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் லாக்பாக் ராஜா விநாயகர் சிலையை தரிசனம் செய்ய வருவார்கள்.
விநாயகர் சதுர்த்தி தொடங்கி ஆனந்த சதுர்த்தி வரை லால்பாக் ராஜா மண்டலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டும்.
கொண்டாட்டம் ரத்து
கடந்த 1934-ம் ஆண்டு முதல் 85 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி வரும் லால்பாக் ராஜா மண்டல், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விழாவை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த மண்டல் செயலாளர் சுதிர் சால்வி கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என முடிவு செய்து உள்ளோம். அதற்கு பதிலாக ரத்த தானம் மற்றும் பிளாஸ்மா தானம் செய்வதற்கான முகாம்களை ஏற்பாடு செய்து திருவிழாவை கொண்டாடுவோம்.
முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் கொடுக்கிறோம். கொரோனா வைரசால் உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவோம். லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கவுரவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story