ஊரடங்கு தொடர்வதால் மாவட்ட கோர்ட்டுகளின் இடைக்கால உத்தரவுகள் 30-ந்தேதி வரை நீட்டிப்பு


ஊரடங்கு தொடர்வதால் மாவட்ட கோர்ட்டுகளின் இடைக்கால உத்தரவுகள் 30-ந்தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 2 July 2020 5:45 AM IST (Updated: 2 July 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கோர்ட்டுகளில் பல்வேறு உத்தரவுகளில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

மாவட்ட கோர்ட்டுகளில் பல்வேறு உத்தரவுகளில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வழக்குகள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தீவிரமடைந்ததால், அனைத்து கோர்ட்டுகளுக்கும் விடுமுறை அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்பேரில் சென்னை, மதுரை ஐகோர்ட்டுகள் சார்பில் மாவட்ட கோர்ட்டுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களுடன் விடுமுறை அளித்து உத்தரவிட்டன. பின்னர் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மாவட்ட கோர்ட்டுகளில் அனைத்து வழக்குகளையும் ஊரடங்கு முடியும் வரை தள்ளிவைக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குற்ற வழக்குகள், சிவில் வழக்குகளின் விசாரணை, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கலாகி நிலுவையில் இருந்த மனுக்கள், குற்ற வழக்குகளில் கைதிகள் ஆஜராக உத்தரவிட்டது என பல்வேறு வழக்குகளையும் ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல், மே மாதங்கள் முழுவதும் மாவட்ட கோர்ட்டுகள், தாலுகா கோர்ட்டுகளில் எந்த ஒரு வழக்கு விசாரணையும் நடக்கவில்லை.

ஜூன் 1-ந்தேதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து குறிப்பிட்ட மாவட்ட கோர்ட்டுகளில் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை செல்போன் மூலமாகவோ, வீடியோ கான்பரன்சிங் மூலமாகவோ விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தினந்தோறும் சில வழக்குகளை மாவட்ட கோர்ட்டுகள் விசாரித்து வந்தன. இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட கோர்ட்டுகள், தீர்ப்பாயங்களில் ஏற்கனவே பல்வேறு வழக்குகளை ஜூன் 30-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட உத்தரவை ஜூலை 30-ந்தேதி வரை மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீட்டித்துள்ளது.

நீட்டிப்பு

இதுதொடர்பாக டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருந்ததாவது-

கொரோனா ஊரடங்கின் காரணமாக பல்வேறு கோர்ட்டுகளில் ஏராளமான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஏற்கனவே சிறை கைதிகளின் பரோல் விடுமுறை ஜூன் 8-ந்தேதி வரையும், இடைக்கால உத்தரவுகள் ஜூன் 30-ந்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது. தற்போது பரோல் விடுமுறை காலம் நீட்டிக்கப்படவில்லை. எனவே பரோலில் சென்ற அனைத்து கைதிகளும் வருகிற 15-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற இடைக்கால உத்தரவுகளை பொறுத்தவரை இந்த மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நடைபெறவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற குற்றங்களில் தொடர்புடையவர்கள் வெளி மாநிலங்களில் கைது செய்யப்படும் போது மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிரமம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் கேரள நீதித்துறை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கைது செய்யப்படும் நபரை கைதாகும் இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் அடைக்கலாம். அவரை அங்கிருந்து வீடியோ கான்பரன்சில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் போதும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Next Story