ஆகஸ்டு மாத இறுதிக்குள் 40 ஆயிரம் பேரை கொரோனா தாக்கும் பெங்களூருவில் குணம் அடைவோர் எண்ணிக்கை மிக குறைவு


ஆகஸ்டு மாத இறுதிக்குள் 40 ஆயிரம் பேரை கொரோனா தாக்கும் பெங்களூருவில் குணம் அடைவோர் எண்ணிக்கை மிக குறைவு
x
தினத்தந்தி 3 July 2020 3:30 AM IST (Updated: 2 July 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குணம் அடைவோரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால், புதிய நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காத நிலை உருவாகிறது.

பெங்களூரு

பெங்களூருவில் குணம் அடைவோரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால், புதிய நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காத நிலை உருவாகிறது.

கொரோனா பரவல்

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 20 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உண்டாகி வருகிறது. அதே வேகத்தில் நோயில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாட்டின் முக்கிய பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஆமதாபாத் போன்ற நகரங்களில் கொரோனா உச்சக்கட்டத்தில் பரவி வருகிறது.

பெருநகரங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள பெங்களூருவில் மட்டும் பாதிப்பு மிக குறைந்த எண்ணிக்கையில் பதிவாகி வந்தது. இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்டோர், கர்நாடக அரசை பாராட்டினர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை, பெங்களூருவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கூட தாண்டவில்லை. அதனால் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக பெருமிதத்துடன் கூறி வந்தார். நோய் பரவல் கட்டுக்குள் உள்ளதால் இனி கர்நாடகத்திற்கு ஊரடங்கு தேவை இல்லை என்று அவர் அறிவித்தார்.

மிகப்பெரிய சவால்

இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவல் திடீரென வேகம் எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தினமும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 500-க்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால் நேற்று முன்தினம் வரை பெங்களூருவில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பயண மற்றும் தொடர்பு வரலாறே (டிராவல் ஹிஸ்ட்ரி) இல்லை. காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தால், வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகிறது. இது கொரோனாவை கட்டுப்படுத்தும் கர்நாடக அரசின் முயற்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

வீடு திரும்புகிறார்கள்

மேலும், பெங்களூருவில் கொரோனா பாதித்து ஆஸ்பத்திரியில் சேருகின்றவர்களுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை சிகிச்சை தேவைப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். உடனடியாக குணம் அடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

உதாரணத்திற்கு நேற்று முன்தினம் பெங்களூருவில் 735 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஆனால் அன்று ஒருவர் கூட குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. தற்போது 5,290 கொரோனா நோயாளிகளில் 4,649 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் குணம் அடையும் விகிதம் மிக குறைவாக இருப்பதால், புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி கிடைக்காத நிலை உள்ளது.

40 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும், ஆகஸ்டு மாத இறுதிக்குள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் கர்நாடகத்தில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை வீடுகளிலேயே வைத்து தொலைதூர மருத்துவ சேவை மூலம் சிகிச்சை அளிக்க அரசு முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story