நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் 1,000 பேருக்கு சிகிச்சை அளித்து சாதனை


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் 1,000 பேருக்கு சிகிச்சை அளித்து சாதனை
x
தினத்தந்தி 3 July 2020 3:30 AM IST (Updated: 3 July 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் 1,000 பேருக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்து உள்ளது.

நெல்லை, 

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் 1,000 பேருக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்து உள்ளது. இதுவரை 714 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரி

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி ஐகிரவுண்டில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இதுதவிர உள் நோயாளிகளும் தங்கி இருந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், இங்கு கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளுக்கும் இங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளிகளும் இந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

1,000 நோயாளிகள்

ஆரம்பத்தில் ஒரு நோயாளியுடன் சிகிச்சை தொடங்கப்பட்டது. பின்னர் மெதுவாக ஒன்றிரண்டாக கொரோனா நோயாளிகள் இங்கு சேர்ந்து சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினார்கள். சமீபகாலமாக தினமும் 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இந்த நிலையில் இங்கு 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சாதனை படைக்கப்பட்டது.

இதில் 714 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். நேற்று முன்தினம் நிலவரப்படி 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். 67 நோயாளிகள் சித்த மருத்துவ கல்லூரி மற்றும் முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 8 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டனர்.

உற்சாக பணி

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா நோயாளிகள் உயிரை காக்க மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர கொரோனா பரிசோதனை மையமும் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மையமும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட்டு சளி மாதிரிகளை பரிசோதனை செய்து முடிவுகளை தெரிவிக்கிறது.

இங்கு டாக்டர்கள், நர்சுகள், ஊழியருக்கு கொரோனா ஏற்பட்ட போதிலும் பணியில் தொய்வு இன்றி கொரோனா நோயாளிகளை பாதுகாப்பதில் உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறோம்“ என்றனர்.

Next Story