ஊரடங்கு காலத்தில் மின்தேவை அதிகரிப்பால் மின்சார கட்டணம் இரு மடங்கு உயர்வு


ஊரடங்கு காலத்தில் மின்தேவை அதிகரிப்பால் மின்சார கட்டணம் இரு மடங்கு உயர்வு
x
தினத்தந்தி 2 July 2020 11:30 PM GMT (Updated: 2 July 2020 11:30 PM GMT)

ஊரடங்கு காலத்தில் மின்தேவை அதிகரிப்பு காரணமாக மின்சார கட்டணம் இரு மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம்,

ஊரடங்கு காலத்தில் மின்தேவை அதிகரிப்பு காரணமாக மின்சார கட்டணம் இரு மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி தொடங்கிய ஊரடங்கு நேற்றுடன் 100-வது நாளை எட்டியது. இந்த 100 நாட்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். மளிகை, காய்கறி, ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட அனைத்து விதமான தொழில்களும் முடங்கி போய் உள்ளன.

வீடுகளில் முடங்கினர்

இது ஒருபுறம் இருக்க, தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த 50 சதவீதத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்து தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பள்ளி, கல்லூரிகளும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் தனியார் பள்ளிக்கூடங்கள் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகிறார்கள். அதேபோல காலையில் சிறிது நேரம் படிப்பது, எழுதுவது என்று பெற்றோர்களின் அறிவுரையை குழந்தைகள் கேட்டு நடந்தாலும் பெரும்பாலான நேரம் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அவர்கள் பொழுதை கழித்து வருவதை காண முடிகிறது.

குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் இருப்பதால் மின்விசிறி எப்போது பார்த்தாலும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு சில வீடுகளில் கம்ப்யூட்டர் இருப்பதால் இணையதளம் பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் அனைவரின் வீடுகளிலும் மின்சாரம் தேவை அதிகரித்து வருவதால் மின் கட்டணம் இரு மடங்கு கட்ட வேண்டி உள்ளது என்று பொதுமக்கள் புலம்பி வருவதை காணமுடிகிறது.

இருமடங்கு உயர்வு

பொதுவாக 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு உதாரணத்திற்கு மின் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியிருந்தால் தற்போது அது இரு மடங்காக ரூ.1,000 செலுத்த வேண்டி உள்ளது. டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தற்போது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மின் கட்டணம் வந்துள்ளது.

வேலையிழப்பு, வீட்டு வாடகை கட்ட முடியாமல் தவிப்பு, பொருளாதாரம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை பொதுமக்கள் ஒருபுறம் சந்தித்து வந்தாலும் மறுபுறம் மின் கட்டணம் இரு மடங்கு கட்ட வேண்டியுள்ளதால் ஏழை, எளிய மக்கள் மட்டு மின்றி அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துண்டிக்கும் நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 85 சதவீதத்திற்கும் மேல் மின் கட்டணங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்திவிட்டனர். மீதியுள்ள 15 சதவீதம் பொதுமக்கள் மட்டுமே மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது சேலம் மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாத குடியிருப்பு மற்றும் தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அங்கு உள்ள மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மின் கட்டணம் செலுத்த முடியாத பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Next Story