துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 170 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது


துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 170 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 3 July 2020 12:05 AM GMT (Updated: 3 July 2020 12:05 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,031 ஆக உயர்ந்துள்ளது.

170 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 170 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,031 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பழகியவர்கள், குடும்பத்தினர் உள்பட பலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இவர்களில் பெங்களூருவில் இருந்து 3 பேரும், சென்னை, கோவை, கும்பகோணம், வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

துணை போலீஸ் சூப்பிரண்டு பாதிப்பு

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 170 பேரில், மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு, அவரது வாகன டிரைவர், மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றும் 39 வயது பெண் உள்பட 3 பேர், சூப்பிரண்டின் உதவியாளர், மற்றொரு போலீஸ்காரர் என 7 ஆவர். சூப்பிரண்டு அலுவலகத்தில் அடுத்தடுத்து காவலர்களுக்கு கொரோனா பரவி வருவதால் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தனது அலுவலக பணியை, அங்குள்ள மரத்தின் அடியில் மேற்கொண்டு வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிகத்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் இடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

Next Story