பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு


பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 3 July 2020 12:34 AM GMT (Updated: 3 July 2020 12:34 AM GMT)

பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.

மத்தூர், 

பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.

பாரூர் பெரிய ஏரி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தண்ணீரை எம்.எல்.ஏ.க்கள் சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்), மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை) ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் எம்.எல்.ஏ.க்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

135 நாட்கள்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் வருகிற நவம்பர் மாதம் 13-ந் தேதி வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாரூர் பெரிய ஏரியில் தற்போது உள்ள நீர்இருப்பு மற்றும் கால்வாயில் வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தைக் கொண்டு மேலும் பருவமழையை எதிர்நோக்கியும் பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கனஅடி வீதமும் மொத்தம் வினாடிக்கு 70 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள 7 ஊராட்சிகளின் பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 1583.75 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனால் பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி மற்றும் தாதம்பட்டி ஆகிய ஊராட்சிகள் பயன்பெறும்.

மகசூல்

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித்துறையினருக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) சேது ராமலிங்கம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் உதவி பொறியாளர் முருகேசன், போச்சம்பள்ளி தாசில்தார் நிரஞ்சன்குமார், துணை தாசில்தார் மகேஷ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story