கொரோனா பாதிப்பு பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் சப்-கலெக்டர் தினேஷ்குமார் தகவல்


கொரோனா பாதிப்பு பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்   சப்-கலெக்டர் தினேஷ்குமார் தகவல்
x
தினத்தந்தி 3 July 2020 1:25 AM GMT (Updated: 3 July 2020 1:25 AM GMT)

கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என சப்-கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.

சிவகாசி,

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.

தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். சிவகாசி நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அய்யனார், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, இமானுவேல், கண்ணன், வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அபராதம்

கூட்டத்தில் சப்-கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது:-

சிவகாசி பகுதியில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். சிவகாசி ரத வீதிகளில் உள்ள கடைகளில் சமூக இடைவெளிகளை யாரும் கடைப்பிடிக்கவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வருகிறது. இந்த பகுதியில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். விதிகளை மீறும் நிறுவனங்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும்.

முக கவசம்

தொடர்ந்து விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும். வருவாய்த்துறை, போலீஸ்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் முற்றிலும் ஒழியும் வரை பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியில் நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story