முறைகேடாக இயங்கும் பார்கள்: டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளி பின்பற்றப்படாத அவலம்


முறைகேடாக இயங்கும் பார்கள்:  டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுப்பிரியர்கள்   சமூக இடைவெளி பின்பற்றப்படாத அவலம்
x
தினத்தந்தி 3 July 2020 5:02 AM GMT (Updated: 3 July 2020 5:02 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகம் கூடுகிறார்கள். முறைகேடாக பார்கள் இயங்குவதால் மதுப்பிரியர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துகிறார்கள். இதனால் சமூக இடைவெளி பின்பற்றப்படாத அவலம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாபரவல் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் மூலமாக கொரோனா தொற்று அதிகரித்தாலும் கூட, தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவுரையாக இருக்கிறது. தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தாலோ, தடுப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்தாலோ, முககவசம் அணியாமல் இருந்தாலோ அபராத நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் 22 பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு முண்டியடித்து சரக்குகளை வாங்குவதில் இருந்து ஒன்று சேர்ந்து மதுக்குடிப்பது வரை சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ளனர். மாநகரின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அந்த கடைக்கு அருகே உள்ள தள்ளுவண்டி உணவகங்களில் மதுப்பிரியர்களின் கூட்டமாக கூடுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

விரைந்து நடவடிக்கை

மதுபான பார்களை திறக்க அனுமதி கிடையாது. இதனால் மதுப்பிரியர்கள் சரக்குகளை வாங்கி டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள சந்துப்பகுதியிலும், இரவு நேரங்களில் இருட்டு பகுதியிலும் நின்று மது அருந்தி விட்டு செல்கிறார்கள். ஆனால் சில இடங்களிலோ முறைகேடாக பார்கள் இயங்குகிறது. அங்கு மதுப்பிரியர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி செல்வது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பார்களில் மதுப்பிரியர்கள் கூடுவது கொரோனா பரவலுக்கு சாதகமாக அமையும் என்றும், மாவட்ட நிர்வாகம் இதில் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பூர் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் வேளையில் மதுப்பிரியர்கள் ஒன்று கூடுவதை தடுப்பதும் இப்போதைய காலகட்டத்துக்கு முக்கியமாக இருக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story