3 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உயிரிழந்தவரின் உடல் அரசலூர் வந்தது


3 மாதங்களுக்கு முன்பு  சவுதி அரேபியாவில் உயிரிழந்தவரின் உடல் அரசலூர் வந்தது
x
தினத்தந்தி 3 July 2020 11:18 AM IST (Updated: 3 July 2020 11:18 AM IST)
t-max-icont-min-icon

3 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உயிரிழந்தவரின் உடல் அரசலூர் கொண்டு வரப்பட்டது.

வேப்பந்தட்டை, 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தன்(வயது 57). சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி உயிரிழந்துவிட்டார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கந்தன் இறந்த செய்தி குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்தை அணுகி, உடலை மீட்டுத்தர கோரிக்கை மனு அளித்தனர். அப்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததால், அவரது உடலை கொண்டு வருவதில் சிக்கல் நீடித்தது.

அரசலூர் கொண்டு வந்த முஸ்லிம்கள்

இந்நிலையில் கந்தனின் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடலை இந்தியா கொண்டுவர உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து த.மு.மு.க. மாநில பொது செயலாளர் ஹாஜாகனி, சவுதி மண்டல த.மு.மு.க. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடலை கொண்டுவர முயற்சி மேற்கொண்டார். அங்குள்ள நிர்வாகிகள் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசி கந்தனின் உடலை சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் சரக்கு விமானம் வாயிலாக அனுப்பி வைத்தனர்.

விமானத்தில் வந்த உடலை சென்னை விமான நிலையத்திலிருந்து பெற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆம்புலன்சில் ஏற்றி மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஹயாத் பாஷா, மாவட்ட தலைவர் சுல்தான் மைதீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் குதரத்துல்லா உள்ளிட்டோர் உடலை அரசலூர் கிராமத்திற்கு கொண்டுவந்து குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைத்தனர். அங்கு கந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கந்தனின் உடலை அரசலூர் கொண்டு வர உதவிய த.மு.மு.க.வினருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Next Story