குளித்தலை நகராட்சியில் கடை உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்


குளித்தலை நகராட்சியில்   கடை உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை   ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 July 2020 6:41 AM GMT (Updated: 3 July 2020 6:41 AM GMT)

குளித்தலை நகராட்சியில், பல்வேறு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய போலீசார், ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

குளித்தலை, 

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு கடை உரிமையாளர்களுடன் குளித்தலை போலீசார் நேற்று ஆலோசனை நடத்தினர். இதற்கு குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைராஜன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அரசு உத்தரவுப்படி இரவு 8 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்படவேண்டும். நோய் தொற்று பரவாமல் இருக்க கடை உரிமையாளர்கள் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும். கடை உரிமையாளர்கள், ஊரடங்கு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து விதிகளையும் தவறாது பின்பற்றவேண்டும்.

முழு ஊரடங்கு

இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கை கடைப்பிடித்து, கடைகளை மூடவேண்டும். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு தங்கள் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த கடை உரிமையாளர்கள் அனைவரும் முன்வரவேண்டும். குளித்தலை நகராட்சி பகுதியில் ஊரடங்கு நடைமுறை விதிகளை வியாபாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

கூட்டத்தில், குளித்தலை சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் பல்லவிராஜா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாமுனி, போக்குவரத்து போலீசார், பல்வேறு கடை உரிமையாளர்கள், பிரண்ட்ஸ்-ஆப் போலீஸ் இளைஞர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story