கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் ரூ.2,200 கோடி முறைகேடு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு


கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் ரூ.2,200 கோடி முறைகேடு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 July 2020 11:00 PM GMT (Updated: 2020-07-03T22:50:11+05:30)

கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் ரூ.2,200 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பெங்களூரு, 

கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் ரூ.2,200 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

10 லட்சம் முகக்கவசங்கள்

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்களை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதில் பெரிய அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. உபகரணங்கள் சந்தை விலையை விட 2 மடங்கு, 3 மடங்கு அதிகமாக கொடுத்து வாங்கியுள்ளனர். அதாவது கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் சுமார் ரூ.2,200 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளனர். அதாவது ஒரு செயற்கை சுவாச கருவி (வென்டிலேடர்) விலை ரூ.4 லட்சம் தான். ஆயிரம் செயற்கை சுவாச கருவிக்கு ரூ.40 கோடி செலவாகும். ஆனால் அதை ரூ.120 கோடி கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.

முழுஉடல் கவச உடை சந்தையில் ஒன்றின் விலை ரூ.995 ஆகும். அதன்படி அரசு 4.89 லட்சம் கவச உடைகளை வாங்கியுள்ளது. இதற்கு ரூ.48.65 கோடி செலவாகும். ஆனால் ரூ.150 கோடி ரசீது போட்டு வாங்கியுள்ளனர். 10 லட்சம் முகக்கவசங்கள் வாங்க ரூ.10 கோடி செலவாக வேண்டும். ஆனால் ரூ.20 கோடி கொடுத்துள்ளனர்.

பரிசோதனை கருவிகள்

கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க ரூ.40 கோடி தான் செலவாகி இருக்க வேண்டும். ஆனால் ரூ.65 கோடி செலவு செய்துள்ளனர். ஆக்சிஜன் ஒரு சிலிண்டர் விலை சந்தையில் ரூ.4,000 தான். ஆனால் அவற்றின் ஒன்றின் விலையை ரூ.14 ஆயிரம் என்று கணக்கு காட்டியுள்ளனர். அதற்கு ரூ.43 கோடிக்கு பதில் ரூ.80 கோடி வழங்கியுள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 6.2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதிரி பரிசோதனைக்கு ரூ.4,000 என்று கணக்கு போட்டால் ரூ.248 கோடி செலவாக வேண்டும். ஆனால் அரசு சுமார் ரூ.530 கோடி செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உணவு உள்ளிட்ட வசதிகளுக்கு அதிகம் என்றால் ரூ.100 கோடி தான் செலவு ஆகியிருக்க வேண்டும். ஆனால் அரசு ரூ.525 கோடி செலவு செய்துள்ளதாக சொல்கிறது.

விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

சானிடைசர் திரவம் ரூ.80 கோடி, சோப்பு கட்டி கொள்முதலுக்கு ரூ.10 கோடி, பிற செலவுகளுக்கு ரூ.1,732 கோடி செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. கொரோனா தடுப்புக்கு அரசு வாங்கிய உபகரணங்களின் சந்தை விலை ரூ.1,163 கோடி. ஆனால் அரசு கொடுத்துள்ள விலை ரூ.3,392 கோடி ஆகும். அதாவது கொரோனா தடுப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ததில் கர்நாடக அரசு மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. இதுகுறித்து முறையான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

சில ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடாது. மந்திரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. முதல்-மந்திரியால் எதுவும் செய்ய முடியவில்லை. எடியூரப்பாவின் பேச்சை யாரும் கேட்பதில்லை. கொரோனா நிலையை நிர்வகிக்க முதலில் மந்திரி சுதாகருக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பிறகு ஸ்ரீராமுலுக்கு பொறுப்பு மாற்றப்பட்டது. அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அந்த பொறுப்பு மந்திரி சுரேஷ்குமாரிடம் வழங்கப்பட்டது. இப்போது கொரோனா தடுப்பு பொறுப்பை மந்திரி ஆர்.அசோக்கிடம் முதல்-மந்திரி வழங்கியிருக்கிறார்.

படுக்கை கிடைக்காமல்...

கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். அரசு வழங்கும் புள்ளி விவரங்கள் சரியாக இல்லை. தினமும் ஏதாவது ஒரு ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை என்று நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அரசு எந்தவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அரசு அறிவித்த தொகுப்பு திட்ட உதவியும் பயனாளிகளுக்கு சரியான முறையில் போய் சேரவில்லை. முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு ரூ.290 கோடி வந்துள்ளது. இதில் எவ்வளவு நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது?. நாட்டின் பிற மாநிலங்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது கர்நாடகத்தில் குறைவாக உள்ளது.

பெங்களூருவில் ஆகஸ்டு மாத இறுதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தொடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story