மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை கோபிகா எம்.எல்.ஏ. முற்றுகை
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை கோபிகா எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.
திருபுவனை,
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை கோபிகா எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.
கோபிகா எம்.எல்.ஏ. முற்றுகை
புதுவை மாநிலம் மண்ணாடிப்பட்டில் கொம்யூன் பஞ்சாயத்தின் கீழ் திருபுவனை சட்டமன்ற தொகுதி வருகிறது. இந்த தொகுதியில் உள்ள கிராமங்களில் முறையாக குப்பைகள் அகற்றப்படாததால், தெருக்களில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. குடிநீர் பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் இருந்தும் கடந்த 3 மாதமாக திட்டப்பணிகளுக்கு டெண்டர் விடப்படவில்லை. கொம்யூன் பஞ்சாயத்து வளர்ச்சி நிதி இருந்தும், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திருபுவனை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபிகா மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் பலமுறை புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை 10 மணியளவில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கோபிகா எம்.எல்.ஏ. வந்தார். அவர் திடீரென்று அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு வாரத்தில் நடவடிக்கை
தகவல் அறிந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்தங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து கோபிகா எம்.எல்.ஏ. விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திருபுவனை தொகுதி முழுவதும் தேங்கியுள்ள குப்பைகளை உடனே அகற்றவேண்டும், திட்டப்பணிகளுக்கு டெண்டர் வைக்கவேண்டும் என்று கூறினார்.
இந்த கோரிக்கைகள் ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் என்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் உறுதியளித்தார். இதையடுத்து கோபிகா எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து கலைந்துசென்றார். ஒரு வாரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று கோபிகா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story