திசையன்விளையில் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற வாலிபரை சரமாரி தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்


திசையன்விளையில் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற வாலிபரை சரமாரி தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 3 July 2020 11:00 PM GMT (Updated: 3 July 2020 6:19 PM GMT)

திசையன்விளையில் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற வாலிபரை சரமாரியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திசையன்விளை, 

திசையன்விளையில் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற வாலிபரை சரமாரியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வாகன சோதனை

நெல்லை மாவட்டம் திசையன்விளை மெயின் பஜார் காமராஜர் சாலையில் திசையன்விளை போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் திசையன்விளையில் உள்ள ஒரு வங்கி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் சீருடை இன்றி வாகன சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வாலிபர் உள்பட 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதையடுத்து போலீசார் காரில் சென்று சிறிது தூரத்தில் அவர்களை மடக்கினர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அந்த வாலிபர் மட்டும் போலீசிடம் சிக்கிக் கொண்டார்.

வாலிபர் மீது தாக்குதல்

மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் செல்வதா? என்று கூறி போலீசார் அந்த வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தன்னை தாக்கியது போலீஸ்காரர் என்று தெரியாமல் பதிலுக்கு அந்த வாலிபரும் தாக்கினார். இதனால் மற்ற போலீசாரும் அந்த வாலிபரின் கைகளை பிடித்துக் கொண்டனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டருடன் வந்த ஒருவர் காரில் இருந்து லத்தியை எடுத்து வந்து அந்த வாலிபரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் விடுவித்தனர்.

இந்த சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.

விசாரணை

இந்த நிலையில் இந்த வீடியோவில் பதிவாகி உள்ள நபர்களை நேரில் அழைத்து வள்ளியூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அரிகரன் பிரசாத் விசாரணை நடத்தினார். மேலும், இதில் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் திருமணத்திற்காக விடுப்பில் சென்று உள்ளதால் அவரிடம் விசாரணை நடைபெறவில்லை. சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை-மகன் கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் திசையன்விளையில் வாலிபர் ஒருவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story