தூத்துக்குடியில் முதல் முறையாக இரவில் விமானம் இயக்கம்
தூத்துக்குடியில் இருந்து நேற்று முதல் முறையாக இரவில் விமானம் இயக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இருந்து நேற்று முதல் முறையாக இரவில் விமானம் இயக்கப்பட்டது.
விமான நிலையம்
தூத்துக்குடி-சென்னை இடையே 5 விமானங்களும், பெங்களூருக்கு ஒரு விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் பரபரப்பான விமான நிலையமாக மாறி உள்ளது. இந்த நிலையில் விமான நிலையம் விரிவாக்கத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இரவு நேரத்திலும் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் விரைவில் இரவு நேர விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தரையிறக்க அனுமதி
இந்த நிலையில் நேற்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் 42 பயணிகளுடன் மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. மீண்டும் திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் மாலை 6.20 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதற்கு முன்பு 6 மணிக்கு பிறகு எந்த விமானமும் தரையிறக்க அனுமதி கிடையாது. தற்போது இரவில் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டதால், விமானம் முதல் முறையாக இருள் சூழத் தொடங்கிய பிறகு தூத்துக்குடியில் தரையிறங்கியது. அதன்பிறகு தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு தயாராக இருந்த 31 பயணிகளை ஏற்றிக் கொண்டு இரவு 7 மணிக்கு விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. இதனை அனைத்து ஊழியர்களும் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் சுப்ரவேலு, மேலாளர் ஜெயராமன், தீயணைப்பு அலுவலர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story