ரெயில்களை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும் மத்திய அரசுக்கு நாராயணசாமி கோரிக்கை


ரெயில்களை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும் மத்திய அரசுக்கு நாராயணசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 4 July 2020 4:00 AM IST (Updated: 4 July 2020 1:05 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி, 

ரெயில்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

கொரோனா தொற்று

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் பரிசோதனைகளையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400 பேருக்கும், ஜிப்மரில் 1000 பேருக்கும் நாள்தோறும் பரிசோதனை நடக்கிறது. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சோதனை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி வில்லியனூர் கரிக்கலாம்பாக்கத்தில் உமிழ்நீர் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

காரைக்காலில் வெளிநாடு மற்றும் சென்னையில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிக அளவில் பரவி உள்ளது. எனவே எல்லைகளை மூடி வைக்க உத்தரவிட்டுள்ளோம். காரைக்கால் அரசு மருத்துவமனையில் உமிழ்நீர் பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அங்கு அந்த மையம் அமைக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற இடங்களை ஒதுக்கி உள்ளனர். அதற்கு கிராமப்புற மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. மக்களுக்கு இடையூறு இல்லாமல் தான் இந்த சிகிச்சை பிரிவுகள் செயல்படும். எனவே மக்கள் அரசு ஒத்துழைக்க வேண்டும்.

புதுவையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் தளர்வு முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும்.

ரெயில் சேவை

பயணிகள் ரெயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே விமானம், பஸ் சேவைகள் தனியாரிடம் சென்று உள்ளன. ரெயில்களை ஏழை நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தனியாரிடம் சென்றால் அவர்கள் லாப நோக்கத்தோடு செயல்படுவார்கள். எனவே மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தனியாரிடம் செல்வதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமே தவிர பலன் ஏற்படாது. அனைத்து சுமைகளும் மக்கள் மீது சுமத்தப்படும். எனவே இந்த முடிவை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story