நாகர்கோவிலில் சேதப்படுத்தப்பட்ட காமராஜர் சிலையை சீரமைக்க தயார் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேட்டி


நாகர்கோவிலில் சேதப்படுத்தப்பட்ட காமராஜர் சிலையை சீரமைக்க தயார் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 3 July 2020 10:30 PM GMT (Updated: 3 July 2020 8:05 PM GMT)

நாகர்கோவிலில் சேதப்படுத்தப்பட்ட காமராஜர் சிலையை சீரமைக்க தயார் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் சேதப்படுத்தப்பட்ட காமராஜர் சிலையை சீரமைக்க தயார் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.

காமராஜர் சிலை உடைப்பு

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பு பகுதியில் இருந்த காமராஜர் சிலை நேற்று முன்தினம் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ்ராஜன் நேற்று அப்பகுதிக்கு தி.மு.க.வினருடன் சென்று காமராஜர் சிலையை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

சீரமைக்க தயார்

பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்- அமைச்சராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்காற்றியவர். மக்களின் பேரன்பை பெற்றவர். ஏழை எளிய மக்கள் முன்னேற பாடுபட்டவர். அவருடைய சிலை சேதப்படுத்தப்பட்டது மிகுந்த வேதனையை தருகிறது. இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சிலை தி.மு.க. ஆட்சியில் என்னால் திறந்து வைக்கப்பட்டது என்ற முறையிலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதாலும் சேதப்படுத்தப்பட்ட காமராஜரின் சிலையை பராமரிக்கும் குழுவினர் அனுமதித்தால் எனது சொந்த செலவில் இந்த சிலையை சீரமைத்து தர தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.

அவருடன் மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ், நிர்வாகிகள் எம்.ஜே.ராஜன், ஜெயசிங், சீதாமுருகன், வேல்முருகன் உள்பட பலர் உடன் சென்றிருந்தனர்.

Next Story