மும்பையில் பலத்த மழை தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
மும்பையில் நேற்று பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மும்பை,
மும்பையில் நேற்று பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
பலத்த மழை
மும்பையில் 2 நாட்களுக்கு மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இது தொடர்பாக ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க போலீசார் எச்சரித்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று மும்பையில் அதிகாலை முதலே பலத்த மழை பெய்தது. விடாமல் பெய்த மழையால் மும்பையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக தாதர் இந்துமாதா, கிங்சர்க்கிள், சயான், ஒர்லி நாக்கா, சிரா பஜார், பைகுல்லா போலீஸ் நிலைய பகுதி, புலாபாய் தேசாய் ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.
16.6 செ.மீ. மழை
இதேபோல மழைக்காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதேபோல இந்து மாதா பாலத்திற்கு கீழ் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மும்பை நகரில் 16.6 செ.மீ. மழையும், புறநகரில் 10 செ..மீ. மழையும் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மும்பையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதேபோல நேற்று தானே, நவிமும்பை பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக நவிமும்பை சயான் - பன்வெல் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவர் மீது ஏறி விபத்திற்குள்ளானது. போலீசார் கிரேன் மூலம் அந்த லாாியை அங்கு இருந்து அகற்றினர்.
Related Tags :
Next Story