வாகன சோதனையின்போது வாக்குவாதத்தை தவிர்க்கும் கண்காணிப்பு கேமரா


வாகன சோதனையின்போது   வாக்குவாதத்தை தவிர்க்கும் கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 3 July 2020 11:16 PM GMT (Updated: 3 July 2020 11:16 PM GMT)

வாகன சோதனையின்போது சீருடையோடு பொருந்திய கண்காணிப்பு கேமரா அணிந்து பணியாற்றுவதன் மூலம் வீண்வாக்குவாதம் தவிர்க்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

கோவை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 வியாபாரிகள் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்களோடு தொடர்பில் உள்ள போலீசார் கட்டாயம் சீருடையோடு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை அணிந்து பணியாற்ற வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்டாயம் கண்காணிப்பு கேமராவை அணிந்து பணியாற்றி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

வீடியோ ஆதாரம்

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் அனைத்து போக்குவரத்து போலீசாரும் கண்காணிப்பு கேமரா அணிந்து தான் பணியாற்றுகிறார்கள்.

தற்போது ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் வாகன சோதனை மற்றும் ரோந்து பணிக்கு போலீசார் அடிக்கடி செல்கிறார்கள். அப்போது அந்த கேமராவை ஆன் செய்து விடுவோம். போலீசாரும், எதிரில் உள்ள பொதுமக்களும் என்ன பேசுகிறார்கள் என்று அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி விடும். இதன் மூலம் யார் தவறு செய்தார்கள் என்பது வீடியோ ஆதாரத்துடன் கிடைத்து விடும்.

வாக்குவாதம் தவிர்க்கப்படுகிறது

இந்த கேமராவை அணிந்து பணியாற்றும் போது பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் அனாவசியமாக பேசுவது கிடையாது. போலீசார் சொல்லும் அறிவுரைகளை கேட்டுக்கொண்டு சென்று விடுகிறார்கள். போலீசாரும் ஜாக்கிரதையாக பேசும் சூழ்நிலையை இது உருவாக்குகிறது.

ஆனால் கேமரா இல்லாதபோது வீண் வாக்குவாதங்கள் மற்றும் தேவையற்ற பேச்சுக்கள் எழும். ஆனால் கேமரா அணியும்போது அவை கிடையாது. இந்த கண்காணிப்பு கேமரா ஒருவகையில் போலீசாருக்கு பாதுகாப்பானது என்று கூட சொல்லலாம். வாக்குவாதமும் தவிர்க்கப்படுகிறது.

Next Story