4 ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு: அனைத்து கடைகள், சந்தைகள் மூடப்படும்


4 ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு: அனைத்து கடைகள், சந்தைகள் மூடப்படும்
x
தினத்தந்தி 4 July 2020 12:01 AM GMT (Updated: 4 July 2020 12:01 AM GMT)

சேலம் மாவட்டத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் அனைத்து கடைகள், சந்தைகள் மூடப்படும்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் அனைத்து கடைகள், சந்தைகள் மூடப்படும். தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் கைது செய்யப்படுவார்கள், அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தளர்வில்லா முழு ஊரடங்கு

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி, சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மக்கள் கூடுவதை தடுத்திடவும் இந்த நோய் தொற்று பரவாமல் பாதுகாத்திடவும் 144 தடை உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இந்நோய் தொற்று பரவாமல் தடுத்திடவும், நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் நாளை (5-ந் தேதி), 12-ந் தேதி, 19-ந் தேதி மற்றும் 26-ந் தேதி ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் இந்தநாட்களில் அனைத்து வகையான கடைகள், சந்தைகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக மூடப்படுகிறது.

அனைத்து கடைகள், சந்தைகள்

இந்த முழு ஊரடங்கு நாட்களில் சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் அனைத்து ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சிறு கடைகள் முதல் பெரும் கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரி உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும், காய்கறி சந்தைகள், வாரச்சந்தைகள், உழவர் சந்தைகள், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகள், ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சி கடைகள், வாகன போக்குவரத்துக்கள் உட்பட அனைத்தும் இந்த 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுமையாக மூடப்பட வேண்டும்.

முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம். இத்தடையை மீறி காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயணம் மேற்கொள்பவர்களோ, வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களோ கண்டறியப்பட்டால் அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதோடு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இந்த நபர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதற்கான ஆய்வு செய்யப்படுவார்கள்.

இந்த முழு ஊரடங்கு நாட்களில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் வாகன போக்குவரத்து, பால் விற்பனை உள்ளிட்டவைகள் எவ்வித தடைகளும் இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

டீக்கடைகள் 8 மணி வரை செயல்படும்

முழு ஊரடங்கு நாட்கள் (4 ஞாயிற்றுக்கிழமைகள்) தவிர இதர நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) டீக்கடைகள், பேக்கரி, உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டீக்கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக்கூடாது. மற்ற இதர கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர ஏனைய நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கலாம்.

சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நோய்த்தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் வருகிற 4 ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கிற்கும் பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குவதோடு 144 தடை உத்தரவு காலம் வரை அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Next Story