வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் டாக்டர், நர்சுகள் உள்பட 96 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,715 ஆக உயர்ந்தது


வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் டாக்டர், நர்சுகள் உள்பட 96 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,715 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 4 July 2020 12:14 AM GMT (Updated: 4 July 2020 12:14 AM GMT)

வேலூர் தனியார் மருத்துவமனை டாக்டர், நர்சுகள் உள்பட 96 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது.

வேலூர், 

வேலூர் தனியார் மருத்துவமனை டாக்டர், நர்சுகள் உள்பட 96 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,715 ஆக உயர்ந்தது.

டாக்டர், நர்சுகள்

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் தங்கி பணிபுரியும் 25 வயது ஆண் டாக்டர் மற்றும் நர்சுகள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு சளிமாதிரிகள் சேரிக்கப்பட்டன.

நேற்று பரிசோதனை முடிவுகள் வந்ததில் டாக்டர், 2 நர்சுகள், 5-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் பழகிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

96 பேருக்கு கொரோனா

வேலூரில் உள்ள நகைக்கடையில் பணிபுரிய 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கேரளாவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர். அவர்களுக்கு சளிமாதிரி பரிசோதனை செய்ததில் கொரோனாவினால் 3 பேர் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. 3 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேலூர் பொதுப்பணித்துறை அலுவலக ஊழியர், நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் 5 பேர், மொத்த விற்பனை மளிகை, அரிசி வியாபாரிகள் 7 பேர், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சி.எம்.சி. ஊழியர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 15 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 96 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,715 ஆக உயர்ந்துள்ளது.

48 மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகள்

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 29,954 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், 1,715 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சளிமாதிரி எடுத்த நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பரிசோதனை முடிவுகள் 48 மணி நேரத்தில் இனி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பரிசோதனை முடிவுகள் வரும்வரை அந்த நபர்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

Next Story