தேனி மாவட்டத்தில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 110 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 927 ஆக உயர்வு


தேனி மாவட்டத்தில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 110 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 927 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 July 2020 5:56 AM IST (Updated: 4 July 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 2 டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

அதன்படி, கம்பம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும், கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல், பெரியகுளம் போக்குவரத்து பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், தேனி ஆயுதப்படை பெண் போலீஸ், கம்பம் போலீஸ் நிலைய போலீஸ் ஏட்டு, போடி தாலுகா போலீஸ் நிலைய போலீஸ் ஏட்டு, தேனி உளவுப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஓடைப்பட்டியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரரின் மனைவி, மகனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்

அதுபோல், உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் 25 வயது தீயணைப்பு படை வீரர் உள்பட உத்தமபாளையம் பகுதியில் 16 பேருக்கும், சின்னமனூரில் 3 பெண்கள் உள்பட 5 பேருக்கும், தேனி, பழனிசெட்டிபட்டி, வயல்பட்டி, தர்மாபுரி, காட்டுநாயக்கன்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட தேனி தாலுகா பகுதிகளில் 60 வயதை கடந்த 3 முதியவர்கள் உள்பட 31 பேருக்கும், பெரியகுளம் தாலுகாவில் வடகரை, வடுகப்பட்டி, மேல்மங்கலம், டி.கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 14 வயது சிறுமி, 62 வயது முதியவர் உள்பட 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

போடியில் 6 பெண்கள் உள்பட 12 பேரும், ஆண்டிப்பட்டி தாலுகாவில் டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி, தேக்கம்பட்டி, பாலூத்து, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் தாய், மகன் உள்பட 12 பேரும், கம்பத்தில் 4 பெண்கள் உள்பட 13 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

927 ஆக அதிகரிப்பு

ஒரே நாளில் 110 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மேலும் 40 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

இதனால், குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story