சிங்காரவேலன்நகரில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் பொதுமக்கள் போராட்டம்
திருப்பூர் சிங்காரவேலன் நகரில் டாஸ்மாக் கடையை மூடா விட்டால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு சிங்காரவேலன்நகரில் டாஸ்மாக் கடை மற்றும் பார் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் எந்த நேரமும் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதுவதை காணமுடியும். மேலும் நடுரோட்டில் நின்று கொண்டே மது குடிப்பதும், குடித்துவிட்டு அரைநிர்வாணமாக சாலையில் படுப்பதும் அந்த பகுதியில் உள்ள பெண்கள் உள்பட பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்ததுடன், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அந்த கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆலோசனைக்கூட்டம்
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட டாஸ்மாக் மேலாளரையும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் கடையை மூட காலஅவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் ஜீவா காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றுமாலை நடைபெற்றது. இதில் சிங்காரவேலன்நகர், ஜீவா காலனி, ஏ.வி.பி. லே அவுட், கந்தசாமி லே அவுட், பத்மாவதிபுரம் பகுதிகளை சேர்ந்த குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பது என்றும், இதை டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தி, கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் இப்பகுதியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story