திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 450 கொரோனா படுக்கைகள் காய்ச்சல் பரிசோதனையும் தீவிரம்


திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 450 கொரோனா படுக்கைகள்   காய்ச்சல் பரிசோதனையும் தீவிரம்
x
தினத்தந்தி 4 July 2020 3:54 AM GMT (Updated: 2020-07-04T09:24:11+05:30)

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 450 கொரோனா படுக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் மாநகர பகுதிகளில காய்ச்சல் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. திருப்பூர் மாவட்டமும் பச்சை மண்டலமாக இருந்து வந்தது. இதன் பின்னர் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறவர்கள் மூலமாக மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொரோனா படுக்கைகள் மாநகர பகுதிகளில் தற்போது 250 தயார் நிலையில் உள்ளன. இருப்பினும் கூடுதலாக 450 படுக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

காய்ச்சல் பரிசோதனை தீவிரம்

இது குறித்து திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறியதாவது:-

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். தற்போது மாநகர பகுதிகளில் 250 கொரோனா படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

மாநகராட்சி சார்பில் கூடுதலாக 450 படுக்கைகள் திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். விரைவில் இதனை அமைத்து விடுவோம். கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருக்கிறவர்கள் இங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள். பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். இதுபோல் காய்ச்சல் பரிசோதனையும் மாநகராட்சி பகுதிகளில் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story