திருச்சியில் மின்சாரம் பாய்ந்து மாணவன் சாவு பட்டத்தை எடுக்க முயன்றபோது பரிதாபம்
திருச்சியில், மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்றபோது பள்ளி மாணவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
திருச்சி,
திருச்சி வரகனேரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கோவை ரகமத்துல்லா. இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் மாநில பேச்சாளராக உள்ளார். இவருடைய மூத்த மகன் அக்சன்(வயது 13). இவன், திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், அக்சன் நண்பர்களுடன் அந்த பகுதியில் விளையாடி வந்தான். நேற்று மாலை வீட்டின் அருகே இருந்த மின்கம்பியில் பட்டம் ஒன்று சிக்கி இருந்தது. இதைக்கண்ட அக்சன் இரும்பு கம்பி மூலம் பட்டத்தை எடுக்க முயன்றான்.
மின்சாரம் பாய்ந்து சாவு
அப்போது அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மரக்கட்டையை எடுத்து இரும்புகம்பியை பிடித்து இருந்த அவனது கையை தட்டி விட்டனர். ஆனால் அதற்குள் அவரது கை, கால்கள் கருகின. உடனடியாக அக்சனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story