மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி,
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலைக்கு துணைபோன டாக்டர், மாஜிஸ்திரேட்டு, சிறை அதிகாரி உள்பட அனைவரையும் கைது செய்யக்கோரி திருச்சி கோர்ட்டு முன்பு நேற்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பின் சார்பில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில், மூத்த வக்கீல்கள் போஜகுமார், பானுமதி, ஆதிநாராயண பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழிற்சங்கங்கள்
தொழிலாளர் விரோத கொள்கை மற்றும் தனியார்மய கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.
தொ.மு.ச. மாவட்ட தலைவர் குணசேகரன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் துரைராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சுரேஷ், எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் ஜான் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் வங்கி, எல்.ஐ.சி, ரெயில்வே, பி.எஸ்.என்.எல், பெல், துப்பாக்கி தொழிற்சாலை, அரசு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். கொரோனா காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்தது மற்றும் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றியதை கண்டிப்பதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்
சேவைசெய்யும்போது, கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ரூ.50 லட்சத்தை போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் அமல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மண்ணச்சநல்லூர் போக்குவரத்து பணிமனை முன்பு எல்.பி.எப்.ஐ கிளை தலைவர் முருகானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கிளைச் செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொது முடக்கத்தால் வருமானம் இன்றி தவித்து வரும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் வறுமையில் வாடும் அனைத்து தரப்பினருக்கும் ஒவ்வொரு மாதமும் தலா ரூ.7500 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்ணச்சநல்லூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துப்பாக்கி தொழிற்சாலை
மத்திய பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தியும், கருப்பு முக கவசம் அணிந்தும் ஆலையின் முன்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முசிறி-தொட்டியம்
முசிறி கைகாட்டியில் சி.ஐ.டி.யூ. சார்பில் நிர்வாகி ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டார அரசு ஊழியர்கள் சங்க வட்டக்குழு துணைத்தலைவர் ஜெயக்கொடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட மகளிர் அமைப்பாளர் சத்தியவாணி தீர்மானங்கள் குறித்து பேசினார். இதில், பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story