காற்றோட்டத்திற்காக மொட்டை மாடியில் தூங்கிய போது வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


காற்றோட்டத்திற்காக மொட்டை மாடியில் தூங்கிய போது வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 July 2020 10:29 AM IST (Updated: 4 July 2020 10:29 AM IST)
t-max-icont-min-icon

காற்றோட்டத்திற்காக மொட்டை மாடியில் தூங்கிய போது வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம், ரெங்கநாதபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ரேவதி (வயது 29) என்கிற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். செல்வராஜ் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தனது குழந்தைகளுடன் ரேவதி, மாமனார் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றோட்டமாக தூங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு ரேவதி தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியார் மருதம்பாள் ஆகியோருடன் தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தூங்கியுள்ளார். நேற்று அதிகாலையில் மருதம்பாள் எழுந்து பால் கறப்பதற்காக கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக மருமகள் ரேவதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரேவதி வீட்டினுள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 4 பவுன் நகையும், ரூ.2 ஆயிரமும் திருடு போயிருந்தது.

தடயங்கள் சேகரிப்பு

மேலும் இதுகுறித்து ரேவதி பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அந்தப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story