தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே தரம் குறைந்து உள்ளதாகக்கூறி தார் சாலை அமைக்கும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிக்கருப்பூர் ஊராட்சியில் அணைக்குடம்- அணைக்கரை சாலையில் இருந்து கோடாலிக்கருப்பூர் காலனி மயானம் வரை 800 மீட்டர் தூரத்துக்கான தார் சாலை அமைக்கும் பணி ரூ.17 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த சாலை மிகவும் தரம் குறைந்து உள்ளதாகக்கூறி பொதுமக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது ஒப்பந்ததாரர் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கிராம மக்கள் சாலை பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் ஒன்றிய பொறியாளர் விஜயன் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் ஒன்றிய பொறியாளர் மேற்பார்வையின் கீழ் தரமான சாலை அமைத்துத்தரப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து தா.பழூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
Related Tags :
Next Story