தஞ்சை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டு ரூ.8 ஆயிரம் கோடி இலக்கு: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுப்பதை அதிகரிக்க வேண்டும் வங்கியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில், பழனிமாணிக்கம் எம்.பி. பேச்சு
தஞ்சை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டு ரூ.8 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுப்பதை அதிகரிக்க வேண்டும் என்று வங்கியாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பழனிமாணிக்கம் எம்.பி. கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் தஞ்சையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வங்கியின் செயல்பாடுகள், கடன் இலக்குகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசியதாவது:-
காவிரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது கடைமடை பகுதி வரை சென்றடைந்துள்ளது. ஆழ்குழாய் கிணறு வைத்திருக்கும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதர விவசாயிகள் சாகுபடிக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் விவசாய கடன்களை அதிகமாக வழங்கவில்லை.
அதிகமாக பயிர்க்கடன்
விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களை அதிகமாக வழங்கினால் தான் பயனடைய முடியும். எனவே வங்கிகள் பயிர்க்கடன்களை அதிகமாக வழங்க வேண்டும். விவசாயத்துக்கு நகைக்கடன் வழங்குவதில்லை. அதை இதில் சரி செய்ய வேண்டும். எந்த வங்கிகளும் 18 சதவீதம் பயிர்க்கடன் வழங்கவில்லை. பூதலூர், தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களை அதிகமாக வழங்க வேண்டும். அதே போல் கூட்டுறவு வங்கிகளும் கடன்களை அதிகமாக வழங்க வேண்டும்.
ரூ.8 ஆயிரம் கோடி இலக்கு
ஏற்கனவே விவசாயிகள் கஜா புயலால், மழையால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு நெல் பழ நோய் தாக்குதல் மற்றும் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு கடன் வழங்க தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி இலக்கு என்பதை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். எனவே வங்கிகள் விவசாய கடனை அதிக அளவில் கொடுத்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் நபார்டு வங்கி மாவட்ட செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story